பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.125 கோடி வர்த்தகம் பாதிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.125 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 7:06 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ரூ.125 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, வங்கிகளுக்கு வரவேண்டிய வராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 சங்கங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த வேலை நிறுத்தம் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வேலை நிறுத்தம் பற்றி முன்கூட்டியே தகவல் தெரியாத வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பலரும், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் தவித்தனர். இதேபோல, மொத்தமாக பணம் தேவைப்பட்டவர்களும், வேறு வழியின்றி ஏ.டி.எம். எந்திரங்களில் குறைந்த அளவு பணத்தை எடுத்து சென்றனர். பல இடங்களில் ஏ.டி.எம். மையங்களிலும் உடனடியாக பணம் தீர்ந்தது. வேலை நிறுத்த போராட்டத்தால், காசோலை பண பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகிறோம். இதற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். வேலை நிறத்த போராட்டத்தில் ஆயிரத்துக்கம் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.125 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.


Next Story