கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 8:52 PM GMT)

கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. எனினும் அரசு பள்ளிகள் வழக்கம்போல இயங்கின.

கோவை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதை அமல்படுத்தும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்திலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜேக்டோ–ஜியோ அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தொடர்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பாளர் கணேஷ்குமார் வரவேற்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அருள் முருகன், ஜேக்டோ–ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அரசு, கருப்புசாமி, அருளானந்தம் உள்பட பலர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்கம், சுகாதாரத்துறை ஊழியர் சங்கம், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் உள்பட அனைத்துத்துறை சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட அரசுத்துறை அலுவலகங்கள் வெறிச்சோடியது. இதனால் முதியோர் உதவித்தொகை கேட்டு மனுகொடுக்க வந்த பொதுமக்கள் அங்கு ஊழியர்கள் இல்லாததால் ஏமாற்றத்து டன் திரும்பிச்சென்றனர்.

வழக்கம்போல கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் எப்போதுமே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது.

கோவை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என்று மொத்தம் 1,650 அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதில் நேற்று ஏராளமான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் காணப்பட்டது.

ஆசிரியர்கள் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டு இயங்கின. அங்கு பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகள் ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்கள்.

அனைத்து பள்ளிகளும் முறையாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையோ, அந்த பள்ளிகளுக்கு உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட னர்.

பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராததால், மாணவர்களின் வருகையும் குறைவாக இருந்தது. சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால், மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்க தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு ஆசிரியர் என்று பகுதி நேர ஆசிரியர் கள், சிறப்பாசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் நியமிக்கப் பட்டனர். இதனால் அனைத்து அரசு பள்ளிகளும் வழக்கம்போல இயங்கியது. கோவை கல்வி மாவட்டத்தில் எந்த பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படவில்லை. பள்ளிகளும் மூடப்படவில்லை.

70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அவர்கள் நேற்று மட்டும் பணிக்கு வராதவர் களாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. நேற்றில் இருந்து மருத்துவ விடுப்பில் சென்றதாக கடிதம் கொடுத்து இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து ஜேக்டோ–ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி பேராசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என்று 15 ஆயிரம் பேர் கலந்து கொண்ட னர்.

எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் வருகிற 7–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடக்காது. இல்லை என்றால் திட்டமிட்டபடி 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story