அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இடங்களில் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 9:58 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. அரசு பள்ளிகள் நேற்று மிகக்குறைந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கின.

தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் சுருளிநாதன், பெரியசாமி, கிருஷ்ணன், சுப்பிரமணி, பழனி, சேகர், ராஜராஜன், இளங்குமரன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொறுப்பாளர்கள் குணசேகரன், துரைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொறுப்பாளர்கள் ஆரோக்கியம் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத்தலைவர் திருக்குமரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மகளிரணி செயலாளர் புஷ்பலதா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நாகராஜன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத்தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த திரிலோகசந்தர் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்வம், சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜராஜன் வரவேற்றார். நிர்வாகிகள் கிருட்டிணமூர்த்தி, பார்த்திபன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதாரத்துறை மாநில தலைவர் கரிகாலன், மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் அண்ணா குபேரன், விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதேபோன்று அரூர் தாலுகா அலுவலகம் முன்பு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

பென்னாகரத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட பொருளாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகேசன், வட்டார தலைவர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஆனந்தவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராசன், பழனி, காவேரி, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் துரைசாமி வரவேற்றார். இதில் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்

ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைந்து சரிசெய்யப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் ஆகிய ஊதிய முறைகளை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story