பிறந்து 3 நாட்களேயான குழந்தை சாவு; டாக்டர்கள் மீது உறவினர்கள் போலீசில் புகார்


பிறந்து 3 நாட்களேயான குழந்தை சாவு; டாக்டர்கள் மீது உறவினர்கள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 9:58 PM GMT)

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட் களேயான குழந்தை உயிரிழந்தது. டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். முன்னதாக அவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். வேன் டிரைவர். இவருடைய மனைவி திவ்யா (வயது 21). இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியான திவ்யா ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த சனிக்கிழமை அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை, அவருடைய பெற்றோர் பிரசவத்திற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சைப்பிரிவில் திவ்யா அனுமதிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு சுகப்பிரசவம் நடந்ததில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் உடல்நிலை சரியில்லாததால் சிசு தீவிர சிகிச்சைப்பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று மதியம் உயிரிழந்ததாக அப்போது பணியில் இருந்த டாக்டர்கள் திவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து திவ்யாவின் உறவினர்கள் டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், திவ்யா பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த போது, பணியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வரவில்லை. சிறிது நேரம் கழித்து தான் வந்து திவ்யாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது குழந்தை அழவில்லை. இதனால் சிகிச்சைக்காக சிசு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதியம் முதலே குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறிய டாக்டர்கள் திடீரென்று குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரசவத்தின் போதும், தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சரியான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்தது என்றனர். எனவே பணியில் இருந்த டாக்டர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் மருத்துவமனை ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் அனிதா அலுவலகத்துக்கு சென்று அவரிடம் முறையிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டீன் அனிதா இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக பணியில் இருந்த டாக்டர்கள் மீது அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story