நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 10:01 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

நெல்லை,

நாடு முழுவதும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது.

பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது. வராக்கடன் உள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். வராக்கடன் வசூலிப்பதை துரிதப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 262 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 450 அதிகாரிகள், ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் இல்லாததால் வங்கி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகள் மூடப்பட்டன. வங்கி பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சில வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்பது தெரியாமல் வந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையில் இருந்து நேற்று காலை ஊர்வலம் புறப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் ரெங்கன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறும் போது, “பொதுமக்களின் சேமிப்பு வட்டியை உயர்த்த வேண்டும். வாடிக்கையாளர் சேவை கட்டணத்தை ரத்து வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடனை தள்ளுபடி செய்யக்கூடாது. கடன் பாக்கி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

தொடர்ந்து ஊர்வலம் புறப்பட்டது. கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை வங்கி ஊழியர்கள் கையில் வைத்து இருந்தனர். ஊர்வலம் தெற்கு பஜார் வழியாக பாளையங்கோட்டை மார்க்கெட் திடலை சென்றடைந்தது. இதில் திரளான வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story