பெங்களூருவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


பெங்களூருவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:30 PM GMT (Updated: 22 Aug 2017 10:30 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் நேற்று மாநிலம் முழுவதும் வங்கி பணிகள் முடங்கியது.

பெங்களூரு,

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, கிராமப்புறங்களில் புதிய வங்கிகளை தொடங்க வேண்டும், அதிக பணம் புழங்கும் வங்கிகள் பொதுத்துறையின் கீழே நீடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22–ந் தேதி(அதாவது நேற்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தார்கள். அதன்படி, நேற்று வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு கெம்பேகவுடா ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன்பு நேற்று காலையில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் கர்நாடகத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கிளைகள், அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 9 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று வங்கி பணிகள் முடங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


Next Story