விருகம்பாக்கத்தில் 7–வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி


விருகம்பாக்கத்தில் 7–வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 22 Aug 2017 11:23 PM GMT (Updated: 22 Aug 2017 11:23 PM GMT)

விருகம்பாக்கத்தில் 7–வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி, கார் மீது விழுந்ததால் உயிர்தப்பினார்.

பூந்தமல்லி,

விருகம்பாக்கம் அருணாச்சலம் மெயின்ரோடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள 7–வது மாடியில் வசித்து வருபவர் சாரு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயதான இவர், கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ. படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7–வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து ஜன்னலை திறந்து கொண்டு சாரு கீழே குதித்தார். அப்போது அங்கு நிறுத்தி இருந்த காரின் மீது சாரு விழுந்தார். இதில் காரின் மேல்பாகம் நசுங்கியபடி காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தபடி சாரு அலறினார்.

உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும், பெற்றோரும் ஓடி வந்து வலியால் துடித்துக்கொண்டு இருந்த சாருவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7–வது மாடியில் இருந்து குதித்த சாரு காரின் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தரையில் விழுந்திருந்தால் இறந்திருப்பார். தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லூரி மாணவி 7–வது மாடியில் இருந்து கீழே குதித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில தினங்களாக சாரு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது அதன் காரணமாக மாடியில் இருந்து அவர் குதித்தாரா? அல்லது ஆன்லைனில் வேகமாக பரவி வரும் நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டதால், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story