வெள்ளை போர்வையை போர்த்தியதைப்போல் நொய்யல் ஆற்றில் நுரையுடன் பாய்ந்த வெள்ளம் பொதுமக்கள் அதிர்ச்சி


வெள்ளை போர்வையை போர்த்தியதைப்போல் நொய்யல் ஆற்றில் நுரையுடன் பாய்ந்த வெள்ளம் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Sep 2017 1:30 AM GMT (Updated: 19 Sep 2017 8:37 PM GMT)

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் பாய்ந்த வெள்ளத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர்,

பின்னலாடை நகரமான திருப்பூரில் பனியன் உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. பனியன் தொழிலுக்கு முதுகெலும்பாக சாயப்பட்டறைகள் உள்ளன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நொய்யல் ஆற்றில் வெளியிட்டு வந்தன.

இதன்காரணமாக நொய்யல் ஆறு பாழ்பட்டு போனதுடன் ஆற்றங்கரையோர விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. நிலத்தடி நீர் கெட்டுப்போனதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோர்ட்டில் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 2011–ம் ஆண்டு சாயப்பட்டறைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் பின்னர் பூஜ்ஜிய சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து இயக்க சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, திருப்பூருக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மறு சுழற்சி முறையில் மீண்டும் தண்ணீரை சாயப்பட்டறைகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் சில சாயப்பட்டறைகளில் இருந்து முறைகேடாக சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் வெளியிட்டு வருகிறார்கள்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சாயக்கழிவுநீரை முறைகேடாக திறந்து விடுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சாயக்கழிவுநீர் பாய்ந்தது. குறிப்பாக மாணிக்காபுரம் குளத்துக்கு செல்லும் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் பாய்ந்ததை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அப்பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக முதலிபாளையத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தையும், அதில் உறுப்பினர்களாக இருந்த 23 சாயப்பட்டறைகளையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதில் ஒரு சாயப்பட்டறையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் நேற்று காலை திருப்பூரில் நொய்யல் ஆற்றில் வெள்ளை நிறத்தில் நுரை நுரையாக தண்ணீர் சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பாய்ந்ததை தொடர்ந்து இரவு நேரத்தில் சாயப்பட்டறைகள் மீண்டும் சாயக்கழிவுநீரை திறந்து விட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினார்கள்.

திருப்பூர் நடராஜா தியேட்டர் பாலம் அருகே நொய்யல் ஆற்றில் வெள்ளை போர்வையை போர்த்தியதைப்போல் அதிக அளவு நுரை தேங்கியது. இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

இதுபோல் நல்லம்மண் தடுப்பணை, வெள்ளஞ்செட்டிப்பாளையம் தடுப்பணை, பூலவாரி சுகுமார்நகர் தடுப்பணை, காசிப்பாளையம் தடுப்பணை பகுதிகளிலும் நுரை அதிகமாக காணப்பட்டது. ரசாயன கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவதாக பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுதொடர்பாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய திருப்பூர் மாவட்ட பொறியாளர் இளங்குமரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நொய்யல் ஆற்றில் பாய்ந்த நீரை பிடித்து பரிசோதனை செய்தனர். சாயக்கழிவுநீர் கலக்கும்போது நீரில் உப்புத்தன்மை அதிகரிக்கும். அளவீட்டு கருவிகள் மூலம் பல இடங்களில் நொய்யல் ஆற்று நீரை அதிகாரிகள் பரிசோதனை செய்தார்கள். மேலும் நுரையுடன் வெள்ளம் பாய்ந்த பகுதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Next Story