மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியது


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 20 Sep 2017 8:45 PM GMT (Updated: 20 Sep 2017 1:25 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியது.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியது.

பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி, குற்றாலம், அம்பை, கடையம், ராமநதி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் பாபநாசம், ராமநதி பகுதியில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்தது. கேரள மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சேர்வலாறு அணை 101 அடியை தாண்டியது

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 95.67 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 5.64 அடி உயர்ந்து 101.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 767.94 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 86.65 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 1.30 அடி உயர்ந்து 87.95 அடியாக உள்ளது. அணைக்கு 1067.29 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 304.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 44.15 அடியில் இருந்து 45 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு 265 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 70.50 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 66.80 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 57.09 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 5.51 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடியாகவும் உள்ளன.

36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. இதனால் அணைக்கு வருகிற 47.85 கன அடி தண்ணீர் அப்படியே மறுகால் வழியாக வெளியேறுகிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு(மி.மீட்டரில்) வருமாறு:–

ராமநதி–16, சேர்வலாறு–15, கொடுமுடியாறு–12, பாபநாசம்–11, அடவிநயினார்– 8, கருப்பாநதி–6, ஆய்குடி–6. தென்காசி–5, குண்டாறு–4, மணிமுத்தாறு–2.


Related Tags :
Next Story