ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு கைதான 2 பேருக்கும் போலீஸ் காவல்


ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு கைதான 2 பேருக்கும் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:15 PM GMT (Updated: 20 Sep 2017 8:12 PM GMT)

ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

பூந்தமல்லி,

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தமிழகத்தில் இருந்து இளைஞர்களை அனுப்புவது மற்றும் அதற்கான நிதிகள் திரட்டுவதாக வந்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் 9 பேர் ஈடுபட்டு வருவது தெரிந்தது. அதில் முக்கிய குற்றவாளியான ஹாஜாபக்ருதீன் வெளிநாட்டில் பதுங்கி உள்ளார். 2–வது குற்றவாளியான காஜா மொய்தீன், அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார், கொலை வழக்கில் கைதாகி பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், சென்னை வந்தனர். அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை ஓட்டேரி, எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சாகுல்அமீது என்ற சலாவுதீன்(24) என்பவரை கைது செய்து புழல்ங சிறையில் அடைத்தனர்.

கைதான 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மனு அளித்து இருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், 2 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து வரும் 26–ந் தேதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சாகுல்அமீது, காஜாமொய்தீன் 2 பேரையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கைதான சாகுல்அமீது பட்டதாரி ஆவார். இவர் பலமுறை சுற்றுலா விசா மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்து உள்ளார். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதும், அதற்காக நிதி திரட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘2 பேரிடமும் விசாரிக்கும் போதுதான் இவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்?, இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் எங்கு உள்ளனர். இதில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் 7 பேர் குறித்த தகவல்கள் தெரியவரும். இருவரையும் சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளோம்’’ என்றனர்.


Next Story