வி‌ஷம் குடித்து ஆட்டோ டிரைவர் சாவு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் கட்சியினர் தீர்மானம்


வி‌ஷம் குடித்து ஆட்டோ டிரைவர் சாவு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் கட்சியினர் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 8:14 PM GMT)

கொளப்பள்ளியில் வி‌ஷம் குடித்து ஆட்டோ டிரைவர் இறந்தார். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1 பகுதியை சேர்ந்தவர் கனக சுந்தரம். இவருடைய மகன் ராஜா என்ற மகேஷ்வரன் (32). இவர் கொளப்பள்ளி பஜாரில் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவர் கடந்த மாதம் 16–ந் தேதி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் ராஜா என்ற மகேஷ்வரன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வாகன டிரைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஜீப், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கொளப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் திருச்செல்வம், அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் செல்வக்குமார், அகிலேஷ், ஜீப் ஓட்டுனர்கள் சங்க தலைவர் திருச்செல்வம், கம்யூனிஸ்டு கட்சிகள் சீனிவாசன், ரவிச்சந்திரன், முஸ்லிம் லீக் அனிபா, ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகேசன், தே.மு.தி.க. காசிநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நகர பகுதியில் நடைமுறைப்படுத்தாத போக்குவரத்து சட்டங்களை கிராமப்புற பகுதியில் அமல்படுத்தி வரும் போலீசாருக்கு கண்டனம் தெரிவிப்பது, ஆட்டோ டிரைவர் ராஜா என்ற மகேஷ்வரன் சாவுக்கு காரணமான போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சேரங்கோடு ஊராட்சி முழுவதும் போராட்டங்கள் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கொளப்பள்ளி பஜாரில் போலீசாரை கண்டித்து வாகன டிரைவர்கள் கருப்பு கொடிகளை கட்டி வைத்திருந்தனர்.


Next Story