திருவள்ளூர் அருகே ‘கிளினிக்’ நடத்திய போலி டாக்டர் கைது


திருவள்ளூர் அருகே ‘கிளினிக்’ நடத்திய போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2017 12:00 AM GMT (Updated: 20 Sep 2017 9:01 PM GMT)

திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் ‘கிளினிக்’ நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் குடும்பநலம் மற்றும் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தயாளன் தலைமையில் சுகாதாரத்துறையினர் நேற்று பேரம்பாக்கம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள மதன் கிளினிக்கில் ஆய்வு செய்தபோது, சென்னை வில்லிவாக்கம் பாபா நகரை சேர்ந்த தேவராஜ் (வயது 47) பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாரிகள் அவரிடம் சான்றிதழ் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பி.எஸ்சி சைக்காலஜி படித்துவிட்டு கிளினிக் நடத்தியது தெரியவந்தது.

இதுபற்றி மப்பேடு போலீசில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் தேவராஜை கைது செய்தனர். அந்த கிளினிக் மூடப்பட்டது. போலி டாக்டர் தேவராஜ் கடந்த ஆண்டும் இதேபோல் கிளினிக் நடத்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும், புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.


Next Story