வீடு, கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை


வீடு, கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 20 Sep 2017 9:17 PM GMT)

வீடு மற்றும் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறினார்.

தஞ்சாவூர்,

தரமான பால் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பால் தர பரிசோதனை முகாம் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

இந்த பரிசோதனை முகாமில் பால் முகவர்கள், பால் வினியோக தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும், தொழில் அடிப்படையில் வினியோகம் செய்யும் பாலை சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பாத்திரங்களிலும் கொண்டுவந்திருந்தனர். அவற்றை முகாமில் உள்ள அலுவலர்கள் சோதனை செய்தனர்.

இந்த பரிசோதனை முகாமை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் பால் பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதலாவதாக தஞ்சையில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பாலின் தரம் உடனுக்குடன் நவீன பரிசோதனை எந்திரம் மூலம் கண்டறியப்படும். இதில் ஆவின் நிறுவன அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த பரிசோதனையில் பாலில் கலந்துள்ள கொழுப்பு, தண்ணீரின் அளவு மற்றும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதா? என கண்டறிப்பட்டது. வீடு மற்றும் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சோதனையின் போது ஆவின் பொது மேலாளர் காமராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜ்குமார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சந்திரமோகன், விஜயகுமார், ரங்கநாதன், மகேஷ், செந்தில், உமாமகேசன், கிருஷ்ணமூர்த்தி, கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Next Story