வாணியம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வாணியம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 21 Sep 2017 12:07 AM GMT (Updated: 21 Sep 2017 12:07 AM GMT)

வாணியம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகளின் மேற்கூரைகள், பெட்டிக்கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலையோரம் புதிது புதிதாக கடைகள் அமைக்கப்படுகின்றன. அந்த கடைகளில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்படுவதால் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளன. இந்த நிலையில் வாணியம்பாடியிலிருந்து ராணிப்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் அகற்றாவிட்டால் தேசிய நெடுஞ்சாலைத்துறையே அகற்ற அதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று வாணியம்பாடி பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக காலை 10 மணியளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய் அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் போலீசாருடன் அங்கு வந்தனர்.

2 பொக்லைன் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டு கடைகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் மற்றும் பெயர் பலகைகளை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர். அதேபோல் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு பெட்டிக்கடைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன. அவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டன. மேலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடப்பகுதிகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றினர். இதற்கு கடைக்காரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

மேலும் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புகளின் வெளியே ஆக்கிரமித்து குடிசைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அவற்றையும் அதிகாரிகள் அகற்றினர். சாலையில் இருந்த அரசியல் கட்சி கொடிக்கம்பங்களும் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையில் தப்பவில்லை. இதன் மூலம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதுபோல் காணப்பட்டது.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பணிகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை வரை இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story