மத்திய அரசை கண்டித்து நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 5:51 AM GMT (Updated: 28 Oct 2017 5:50 AM GMT)

ஜெயங்கொண்டத்தில் நேற்று மத்திய அரசை கண்டித்து நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாரியங்காவல்,

கைத்தறி துணிகள் மீதான ஜி.எஸ்.டி.வரியை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும், நிலுவையில் உள்ள தள்ளுபடி மானிய தொகை முழுவதையும் உடன் வழங்கிட வேண்டும், கட்டிய ஜி.எஸ்.டி. வரியை திருப்பி வழங்கிட வேண்டும், நலவாரிய பணப்பயன்களை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனே வழங்கிட வேண்டும், ஜி.எஸ்.டி.வரியை கண்டித்து நவம்பர் 9, 10, 11-ந் தேதிகளில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்திபூங்கா சிலை அருகே வந்தடைந்தது. அங்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கைத்தறி நெசவு தொழிற்சங்க தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினார். சக்தி விநாயகர் கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ஜெயச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த துரைராஜ், மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணபிரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக கொடுக்கூர் ராமலிங்கம் வரவேற்றார். முடிவில் தங்கராசு நன்றி கூறினார். 

Next Story