கோவை விமான நிலைய விரிவாக்கப்பணி நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


கோவை விமான நிலைய விரிவாக்கப்பணி நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 28 Oct 2017 7:15 PM GMT)

கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிகளை விரைவுபடுத்த, நில நிர்வாக ஆணையர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என்றும், நிலம் கையகப்படுத்துவதற்காக மார்க்கெட் மதிப்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தை அதிநவீன தரத்துடன் விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். இந்திய விமான போக்குவரத்துச் செயலாளர் ராஜிவ் சவுபே, விமான நிலைய ஆணையத்தலைவர் குருபிரசாத் மகாபாத்ரா, நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே, மற்றும் விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோவைக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்களை இயக்கவும், அதிநவீன தரத்துடன் கூடிய விமான நிலையமாக மாற்றவும், இதற்காக விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்தொடர்ச்சியாக கோவையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் போது நமது மாவட்டத்தில் விமான சேவையில் பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாது சரக்குப்போக்குவரத்தும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும். இதன் மூலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி உயர்வதோடு, தகவல் தொழில்நுட்பத்துறையிலும் ஏற்றம் பெறும்.

இதுதவிர அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதியின் ஏற்றுமதியானது இதன் மூலம் பல மடங்கு உயரும். வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும். அதிகளவில் புதிய தொழில் தொடங்க தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக கோவை திகழும். அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர், கோலாலம்பூர், மலேசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தொடர்ந்து அதிக அளவிலான விமான சேவைகளை வழங்குவதால் கோவை மாவட்டத்தின் தொழில்வளர்ச்சி பெருகி தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.

மேலும், விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகளான சின்னியம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்யவும், நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவும் அனைத்து வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நில நிர்வாக ஆணையர் தலைமையில் அதிகாரிகளை கொண்ட குழு முதல்–அமைச்சரால் அமைக்கப்படவுள்ளது. இந்த குழு நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

நமது மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு நில உரிமையாளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் நில உரிமையாளர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு இருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் துரிதமாக பணியாற்றி வருகிறார்கள். சுகாதார பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சுகாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலர் தேவிதார், நில நிர்வாக இணை ஆணையர் விஜயராணி, விமான நிலைய இயக்குனர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் மற்றும் மத்திய, மாநில அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story