மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்


மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:03 PM GMT)

மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே வளத்தியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு வருகிறது. பின்னர் அங்கிருந்து பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றமுடியாத நிலை ஏற்ற முடியாத நிலை உருவானது.

இதன் காரணமாக பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறினர். இருப்பினும் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான நெடுஞ்செழியன் தலைமையில் ஒன்று திரண்டு அங்குள்ள விழுப்புரம் –ஆற்காடு சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வளத்தி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், உடைந்த குழாயை உடனே சீரமைத்து பொது மக்கள் அனைவருக்கும் சரியான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story