மீண்டும் திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


மீண்டும் திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 28 Oct 2017 8:07 PM GMT)

ஊசூர் அருகே டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள பூதூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபோது, பூதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் மூடப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் எதிர்ப்பையும் மீறி நேற்று மதியம் 12 மணிக்கு பூதூரில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் அரியூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை நாங்களே வேண்டாம் என்று சொல்லி விட்டோம். அதனை மீறி எங்கள் பகுதியில் எதற்கு மீண்டும் திறக்கிறீர்கள் என்று போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார், டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடினர். மேலும் பொதுமக்களிடம் இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் கொடுங்கள் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story