களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவனத்தில் செலுத்தி ரூ.17 லட்சத்தை இழந்தவர் தற்கொலை


களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவனத்தில் செலுத்தி ரூ.17 லட்சத்தை இழந்தவர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2017 11:15 PM GMT (Updated: 28 Oct 2017 8:21 PM GMT)

களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவனத்தில் ரூ.17 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி இழந்த வாடிக்கையாளர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் போனதால் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து, பணத்தை வைப்புத்தொகையாக செலுத்தி இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஓணப் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை திடீரென பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர் நிர்மலன் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் பணத்தை செலுத்தி இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிதி நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டு வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் ரூ.17 லட்சத்தை செலுத்தி, பணம் திரும்ப கிடைக்காததால் மனவருத்தம் அடைந்த வாடிக்கையாளர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 53). இவர் தன்னுடைய மகள் திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்காக மத்தம்பாலை நிதி நிறுவனத்தில் ரூ.17 லட்சத்தை வைப்புத்தொகையாக செலுத்தியிருந்தார். இதற்கிடையே வேணுகோபாலின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நிதி நிறுவனத்தில் செலுத்தப்பட்டிருந்த பணத்தை வைத்து மகளின் திருமணத்தை நடத்தலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் நிதி நிறுவனத்தை மூடி விட்டு உரிமையாளர் தலைமறைவாகி விட்டார் என்ற செய்தியை கேட்டதும் வேணுகோபால் அதிர்ச்சிக்குள்ளானார். 17 லட்சம் ரூபாயை இழந்து விட்டேனே என்று மனவருத்தம் அடைந்தார்.

மேலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தந்து விடுவார்கள், மகளின் திருமணத்தை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். 2 மாதமாகியும் பணம் கிடைக்காததால் வேணுகோபால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மோசடி நிதி நிறுவனத்தால் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, “மோசடி நிதி நிறுவனத்தில் இயக்குனர்களாக பணியாற்றிய 5 பேரை கைது செய்துள்ளோம். மேலும் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட மேலும் சிலரை கைது செய்யவும், மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யவும் கேரள, தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டுகள் நேரடி கண்காணிப்பில் 7 தனிப்படைகள் அமைத்து தேடும் பணி நடந்து வருகிறது. நிதி நிறுவன உரிமையாளர் மாறுவேடங்களில் சுற்றி திரிவதாக தகவல் வருகிறது. அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்“ என்றனர்.


Related Tags :
Next Story