அறையை சுத்தம் செய்வதில் நடந்த தகராறில் கொலை: கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டு சிறை


அறையை சுத்தம் செய்வதில் நடந்த தகராறில் கொலை: கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 24 Nov 2017 4:45 AM IST (Updated: 24 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதில் நடந்த தகராறில் சகமாணவரை கத்தியால் குத்திக்கொன்றவருக்கு கோவை கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை,

நீலகிரி மாவட்டம் எல்லனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்(வயது21). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்தவர் சந்தோஷ்(21). இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர்.

இவர்கள் உள்பட சகமாணவர்கள் பீளமேடு காளப்பட்டி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

மாணவர்கள் தங்கி இருந்த அறைகளை ஒவ்வொரு வாரமும் ஒரு மாணவர் சுத்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சுத்தம் செய்து வந்தனர்.

வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக மாணவர்கள் தினேஷ் மற்றும் சந்தோஷ் இடையே கடந்த 27.7.2015 அன்று இரவில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், அறையில் காய்கறி வெட்டுவதற்கு வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து தினேசின் வயிற்றில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த தினேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.குணசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாணவர் மீது கொலை வழக்கு சட்டப்பிரிவான 302-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், கொலை செய்யும் நோக்கத்துடன் அல்லாமல் மரணம் விளைவிக்கும் குற்றங்களுக்கான தண்டனை சட்டப்பிரிவான 304(1) ன்படி இந்த வழக்கை மாற்றம் செய்து, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிப்பதாக நீதிபதி குணசேகரன் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட சந்தோஷ், கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story