செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 29 Nov 2017 7:40 PM GMT)

செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ நலப்பணிகள் இயக்குனரக அலுவலகத்தில்(டி.எம்.எஸ்.) செவிலியர்கள் போராட்டம் 27–ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியில் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் ஒருபிரிவினர் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். அதன்படி நேற்று இவர்கள் டி.எம்.எஸ். வளாகத்துக்குள் 3–வது நாளாக தொடர் போராட்டம் செய்தனர். அதில் உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கினர்.

இந்த நிலையில், செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆ£ப்பாட்டத்தின் போது செவிலியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் பழனி, அரசு ஊழியர்கள் சங்கம் அரிகிருஷ்ணன், குணசேகர், மணவாளராமானுஜம், ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story