ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு


ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Nov 2017 10:15 PM GMT (Updated: 29 Nov 2017 8:32 PM GMT)

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்புலியூரை சேர்ந்தவர் செல்லையா (வயது 68). இவர், கடந்த 2008-ம் ஆண்டு பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில், சிறப்பு இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் கிட்டங்கியில் ஆவண எழுத்தராக (ரெக்கார்டு கிளார்க்) பணியாற்றிய விவேகானந்தன் சொந்த காரணங்களால் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அலுவலகத்திற்கு பணிமாறுதலாக செல்ல விரும்பினார். இது தொடர்பாக செல்லையாவிடம் ஆலோசனை கேட்டிருந் தார். இந்த நிலையில் முறைப்படி மண்டல மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து ஜெயங்கொண்டத்திற்கு விவேகானந்தன் பணிமாறுதலாகி சென்று விட்டார்.

லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

இதையறிந்த செல்லையா, உனது பணிமாறுதலுக்கு நான் தான் ஏற்பாடு செய்தேன். எனவே அதற்காக ரூ.3,000 லஞ்சம் தருமாறு விவேகானந்தனிடம் கேட்டார். அப்போது நான் முறைப்படி விண்ணப்பித்து தான் பணிமாறுதல் ஆணை பெற்றேன் என விவேகானந்தன் கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் லஞ்சம் தர விரும்பாமல் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில், 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவே கானந்தன் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.3,000-ஐ பெரம்பலூர் அலுவலகத்தில் வைத்து செல்லையாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் கையும், களவுமாக செல்லையாவை பிடித்து கைது செய்தனர்.

4 ஆண்டு சிறை

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையா மீது பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ஊழல் தடுப்பு சட்ட பிரிவு 7-ன்கீழ் செல்லையா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார் செல்லையாவை அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story