2,644 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை


2,644 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 29 Nov 2017 9:20 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து உள்ள 2,644 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு விரைவில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையக்குழுவின் தலைவர் பேராயர் பிரகாஷ் கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு கூட்டம் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையக்குழு தலைவர் பேராயர் பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 2014-2015-ம் கல்வி ஆண்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 322 சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு ரூ.132 கோடியே 40 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு ஆண்டிற்கு 500 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கி வருகின்றது. மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிப்பதற்கும் அரசு நிதிஉதவி வழங்கி வருகிறது. இதை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 55 பேருக்கு கூட்டுறவு துறையின் மூலம் டாம்கோ கடன்உதவிக்கு ரூ.6 கோடியே 81 லட்சம் அளவிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, இதுவரை 1,572 பேருக்கு ரூ.5 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. 2,644 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான தொகை விரைவில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு எண்ணற்ற சலுகைகளையும், உதவிகளையும், நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் தங்களுக்கு தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து அத்திட்டங்களை பெற்று பயன்படுத்தி கொண்டு, தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதை தொடர்ந்து அவர் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். சிறுபான்மையின மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அவற்றை கலெக்டரிடம் வழங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையக்குழு உறுப்பினர் சையத் கமில் சாகிப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் உதவி கலெக்டர் கிராந்தி குமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) இலாஹி ஜான் நன்றி கூறினார். 

Next Story