சித்தராமையா ஆட்சியில் ‘கமி‌ஷன்’ கொடுத்தால் தான் வேலை நடக்கிறது


சித்தராமையா ஆட்சியில் ‘கமி‌ஷன்’ கொடுத்தால் தான் வேலை நடக்கிறது
x
தினத்தந்தி 29 Nov 2017 11:15 PM GMT (Updated: 29 Nov 2017 11:15 PM GMT)

சித்தராமையா ஆட்சியில் ‘கமி‌ஷன்‘ கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சித்தராமையா ஆட்சியில் ‘கமி‌ஷன்‘ கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. குறிப்பாக மந்திரிகள் எம்.பி.பட்டீல், ஆஞ்சனேயா ஆகியோரின் துறைகளில் இந்த ‘கமி‌ஷன்‘ கொள்ளை மிதமிஞ்சிவிட்டது. மாநில அரசு ஊழல் தடுப்பு படை, சி.ஐ.டி. ஆகிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, மந்திரிகள் மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறது.

லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரத்தை இந்த அரசு குறைத்துவிட்டது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால், ஊழல் புகாருக்கு உள்ளான மந்திரிகள் மீது விசாரணை நடத்தப்படும். காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின்படி கிருஷ்ணா அணை நீர்ப்பாசன திட்டங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் ரூ.6,400 கோடி மட்டுமே செலவு செய்துள்ளனர். காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

மேலும் கிருஷ்ணா நதியில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை பயன்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மந்திரி எம்.பி.பட்டீல் பதிலளிக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சி அமைந்தால் கிருஷ்ணா நதிநீர் பாசன திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும். இந்த ஊழல் அரசால் கரும்பு விவசாயிகளுக்கு சரியான விலை கொடுக்க முடியவில்லை. மாநில அரசின் கஜானா காலியாகிவிட்டது.

பெங்களூருவில் அரசுக்கு சொந்தமான லே–அவுட்டுகளில் அதிக விலை மதிப்புள்ள மூலை வீட்டுமனைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.980 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. மகதாயி நதி நீர் பிரச்சினை தொடர்பாக கோவா முதல்–மந்திரியுடன் நான் பேசி இருக்கிறேன். குடிநீருக்கு தண்ணீர் பெற்று கொடுப்பது எனது வேலை. அதை செய்து முடிப்பேன்.

மத்திய அரசு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க தயாராக உள்ளது. ஆயினும் கர்நாடக அரசு அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குகிறது. இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கிறது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.



Next Story