கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது சித்தராமையா பேச்சு


கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2017 11:16 PM GMT (Updated: 29 Dec 2017 11:16 PM GMT)

எடியூரப்பாவின் மாயாஜாலம் எடுபடாது என்றும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது என்றும் முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.

கோலார் தங்கவயல்,

முதல்–மந்திரி சித்தராமையா ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு பாகேபள்ளி டவுனில் ரூ.146 கோடி செலவில் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பாகேபள்ளி டவுன் மினி ஸ்டேடியத்தில் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரிலும், ஜனதாதளம்(எஸ்) தலைவர் குமாரசாமி குமார பர்வா என்ற பெயரிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மக்களிடம் என்ன பிரசாரம் செய்தாலும் அவர்களின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தோல்வியை சந்திப்பது உறுதியாகி விட்டது. முதல்–மந்திரி ஆகிவிடாலும் என்ற பகல் கனவு காணும் எடியூரப்பா, குமாரசாமியின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.

ஜனதாதளம்(எஸ்) கட்சி குடும்ப அரசியல் செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெற்றால் துணை முதல்–மந்திரி பதவியை தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுப்பதாக தேவேகவுடா கூறுகிறார். அவர் என் முதல்–மந்திரி பதவியை தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு கொடுக்க கூடாது?

ஊழல் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவுக்கு, எங்களை பற்றி பேச தகுதியே இல்லை. அவர் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியே பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். அவரின் மாயாஜாலம் கர்நாடகத்தில் எடுபடாது. நாங்கள் கடந்த 4 ஆண்டுகள் 8 மாதங்களில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை கேட்போம். ஆனால் பா.ஜனதாவினர் மக்களிடம் எதை எடுத்து கூறி வாக்குகள் கேட்பார்கள் என்று தெரியவில்லை.

காங்கிரசுக்கு மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story