பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு கவர்னர் கிரண்பெடி தகவல்


பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2017 11:32 PM GMT (Updated: 29 Dec 2017 11:32 PM GMT)

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.

புதுச்சேரி,

ஆங்கில புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் முன்னிலை வகித்தார்.

இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டுகள் ரச்சனா சிங், குணசேகரன், அப்துல் ரகீம், பாலகிருஷ்ணன், தெய்வசிகாமணி, ஐ.ஆர்.சி. மோகன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி பேசுகையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பெடி கேட்டறிந்தார். இதுதொடர்பாக அறிக்கையை நாளை (அதாவது இன்று) பகல் 1 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நகரில் ரோந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வேன் என்றார்.

அதைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி நாளை (இன்று) காலை 11 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.

பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபடுவார்கள். அதேபோல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாட்ஸ்–அப் மூலமாக பொதுமக்கள் தங்களில் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஆண்டில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் கூறுகையில், ‘சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக ரடிவுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்’ என்றார்.


Next Story