முதல்–அமைச்சர் வீடு முன்பு சாலைப்பணியாளர்கள் மீண்டும் போராட்டம்


முதல்–அமைச்சர் வீடு முன்பு சாலைப்பணியாளர்கள் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2017 9:30 PM GMT (Updated: 30 Dec 2017 7:06 PM GMT)

பழனியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 6–வது வட்ட மாநாடு நடந்தது.

பழனி,

பழனியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 6–வது வட்ட மாநாடு நடந்தது. இதற்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கவேல் தொடக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்கள் இறந்தால் விதிமுறைகளை தளர்த்தி அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலை பணியாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20, 21–ந்தேதிகளில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் கோரிக்கைகளில் முக்கியமான 4 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்–அமைச்சர் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலின் போது இந்த கோரிக்கைகளையும் பட்ஜெட்டில் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். அதன்படி எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் முதல்–அமைச்சர் வீடு முன்பு சாலை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவார்கள். இதற்கான அறிவிப்பு மே மாத இறுதியில் திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான மாநாட்டில் வெளியிடப்படும். மேலும் மாவட்ட அளவிலான மாநாடு திண்டுக்கல்லில் வருகிற 19–ந்தேதி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story