திண்டிவனம் பகுதியில் ரே‌ஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு


திண்டிவனம் பகுதியில் ரே‌ஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Dec 2017 10:00 PM GMT (Updated: 30 Dec 2017 8:02 PM GMT)

திண்டிவனம் பகுதியில் ரே‌ஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக கோட்டாட்சியரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திண்டிவனம்,

திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் ரே‌ஷன்பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்று தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர். மேலும் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் சப்–கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் டாக்டர் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி சொக்கலிங்கம், சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் தயாளன், தாசில்தார்கள் திண்டிவனம் கீதா, செஞ்சி கலா, மேல்மலையனூர் மணிகண்டன், மரக்காணம் சீனுவாசன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நமச்சிவாயம், கடவம்பாக்கம் மணி, பேராசிரியர் கல்விமணி, செஞ்சி ராஜேந்திரன், ஜெயராஜ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், திண்டிவனம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. செஞ்சி தாலுகாவில் 7 கிராமங்களில் 2 குடும்ப அட்டை வைத்துள்ளதாக கூறி மண்எண்ணெய் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி மண்எண்ணெய் வழங்க வேண்டும். செஞ்சி தாலுகாவில் 70 சதவீதம் புழுங்கல் அரிசி, 30 சதவீதம் பச்சை அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 30 சதவீதம் புழுங்கல் அரிசியும், 70 சதவீதம் பச்சரிசியும் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் 75 சதவீதம்தான் வழங்கப்படுகிறது. பாமாயில் 50 சதவீதம்தான் வழங்கப்படுகிறது.

விழுப்புரம்–ஆற்காடு சாலை ஆக்கிரமிப்பை அகற்றி விரிவுபடுத்தி பக்க காவல்வாய் அமைக்க வேண்டும். இதேபோல் வளத்தி ஊராட்சி சந்தைமேடு பகுதியில் புறம்போக்கு நிலத்தை 2 பேர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். செம்மேடு கிராமத்தில் வசித்து வரும் 25 சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சப்–கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.


Next Story