நந்தியம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை


நந்தியம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 29 April 2018 10:30 PM GMT (Updated: 29 April 2018 7:35 PM GMT)

நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம் அடைந்ததால், தற்காலிகமாக நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பயன்பாடின்றி கிடக்கும் கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் 5 குக்கிராமங்கள், 20-க்கும் மேற்பட்ட நகர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் பெருகி வருகின்றன.

நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அந்த ஊரில் உள்ள சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான அந்த கட்டிடம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்தது. மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்ததால் அலுவலக கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகமானது, அந்த கிராமத்தில் உள்ள கிளை நூலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஊராட்சியின் பதிவேடுகள், கணக்கு வழக்குகளை அங்கு வைக்க இடம் இல்லாமல் நெருக்கடியான நிலை உள்ளது.

மேலும் கிராம சபை கூட்டம் மற்றும் இதர கூட்டங்கள் நடத்தவும் போதிய இடவசதி இல்லை. இதனால் ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் வரி, குடியிருப்பு வரி, தொழில் வரி செலுத்த வரும் பொதுமக்கள் மற்றும் குடிநீர், தெரு விளக்கு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

நூலக கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படுவதால் நூலகத்துக்கு வரும் வாசகர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது பயன்பாடு இல்லாமல் பூட்டிக்கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் உள்ள ஜன்னல் கதவுகளை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். மழையால் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்து, வெறும் சுவர்களுடன் வெட்ட வெளியாக அந்த கட்டிடம் காட்சி அளிக்கிறது.

இதனால் அந்த கட்டிடத்தின் உள்ளே மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கட்டிடத்தின் உள்ளே ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு சிதறிக்கிடக்கிறது.

எனவே சேதம் அடைந்த இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர், கலெக்டர் உள்பட அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

நந்தியம்பாக்கம் ஊராட்சி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பயன்படுத்த முடியாமல் வீணாக இருக்கும் ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து விட்டு, புதியதாக அந்த இடத்தில் சொந்த கட்டிடம் கட்டி அங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தியம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story