கோவை அருகே செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை அதிபரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்தது


கோவை அருகே செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை அதிபரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்தது
x
தினத்தந்தி 29 April 2018 11:15 PM GMT (Updated: 29 April 2018 9:09 PM GMT)

கோவை அருகே செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை அதிபரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

சூலூர்,

கோவையை அடுத்த கண்ணம்பாளையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குட்கா தொழிற் சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான போதை பாக்குகளும், அவற்றை தயாரிக்க பயன் படுத்தப்படும் ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். அத்துடன் அங்கிருந்து 1,100 கிலோ போதை பாக்குகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த தொழிற்சாலையை நடத்தி வந்த புதுடெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 48), மேலாளர் ரகுராமன் (45) மற்றும் அங்கு வேலை செய்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜய் (30), ராஜஸ்தானை சேர்ந்த ராம்தேவ் (24), சோஜிராம் (29) ஆகிய 5 பேர் மீது புகையிலை பொருட்கள் சட்டத்தின் கீழ் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில் அமித் ஜெயினை தவிர மற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் சூலூர் மாஜிஸ்திரேட்டு வேடியப்பன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த தொழிற்சாலையை நடத்தி வந்த அமித் ஜெயின், மாதத்தில் ஒரு முறை மட்டுமே இங்கு வருவார். அப்போது அவர் தங்கி இருக்க தொழிற்சாலை அருகே சொகுசு பங்களாவும் உள்ளது. இந்த பங்களாவுக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வந்து செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டதை அறிந்த அமித் ஜெயின் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அமித் ஜெயினின் செல்போனை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது அவர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 தனிப்படைகளை சேர்ந்த போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். அங்குள்ள போலீஸ் உதவியுடன் அவர்கள் அமித் ஜெயினை பிடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

குட்கா மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் டெல்லியில் இருந்து கோவை வந்துள்ளது. குட்கா தொழிற்சாலை செயல்பட அதிகாரிகள் மற்றும் போலீசாரில் சிலருக்கு தெரியாமல் இந்த தொழிற்சாலை நடக்க வாய்ப்பு இல்லை என்பதால், யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அமித்ஜெயினுக்கு வடமாநிலங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் போதை பொருட் கள் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து அவர் கொடுக்கும் தகவலின்பேரில் மட்டுமே இங்கிருந்து குட்கா உள்பட போதை பொருட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே இங்கிருந்து எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு யார் மூலம் வினியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய லாரிகள் பதிவாகி இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வரை 72 குட்கா மற்றும் போதை பாக்கு பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. பின்னர் அதற்கு தடை செய்யப்பட்டதால் அவை மூடப்பட்டன. எனினும் அந்த தொழிற்சாலைகள் மறைமுகமாக இயங்கி வருகிறதா என்பது குறித்தும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம், கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன்பு எந்தெந்த தொழிற்சாலைகள் அனுமதி பெற்றது என்பது குறித்த பட்டிலை கேட்டு உள்ளனர். அத்துடன், பான்மசாலா தயாரிக்க அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் எவை? அவைகள் எங்கு செயல்பட்டு வருகிறது என்ற பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் போலீசார் பான்மசாலா தயாரிக்க உரிமம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை வளாகத்தில் குட்கா உள்பட போதையை கொடுக் கக்கூடிய பாக்குகள் புதைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மேலாளர் ரகுராமனை காவலில் எடுத்து விசாரணை செய்தால், மேலும் பல தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

ரகுராமனிடம் விசாரணை நடத்தினால், இந்த தொழிற்சாலையில் இருந்து முக்கிய பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் என்று பலருக்கு மாமூல் கொடுக்கப்பட்டதா? எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவரும். எனவே அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story