காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் பேச்சு


காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் பேச்சு
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:14 PM GMT)

காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசினார்.

திருச்சி,

காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான 7 மாத பயிற்சி திருச்சி மாவட்ட தற்காலிக காவல் பயிற்சி பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி நிறைவின் அணி வகுப்பு விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த 298 காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசியதாவது:-

காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பண்பு முக்கியம். தமிழக காவல்துறையில் 1¼ லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் அதிகாரிகள் 25 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். காவலர்கள் தான் 1 லட்சம் பேர் உள்ளனர். காவல்துறைக்கு நல்ல பெயர் வருவதிலும், வராமல் இருப்பதிலும் காவலர்களின் பங்கு அதிகம். ஏனென்றால் நீங்கள் தான் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களாகவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்களாகவும் இருக்கிறீர்கள். பயிற்சி அளிக்கப்பட்ட 7 மாதத்தில் நீங்கள் சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

காவல்துறை பணி என்பது 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டும். மற்றவர்களுக்கு விசேஷ நாட்கள் என்றால் அது காவல்துறையினருக்கு கிடையாது. அதனால் தான் காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது. காவல்துறை மட்டுமல்ல, எந்ததுறையில் பணியாற்றினாலும் சிறந்து விளங்குபவர்களுக்கு நற்பெயரும், மரியாதையும் உண்டு. காவல்துறையில் பணியாற்றினாலும் உங்களுடைய தனித்திறமைகளை தொடர்ந்து வளர்த்து கொள்ள வேண்டும். இந்த பணி உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தடையல்ல. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி நல்ல பெயர் எடுத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு கமிஷனர் பரிசுகளை வழங்கினார். முடிவில் பயிற்சி பள்ளி துணை முதல்வர் பொன்னுமலை நன்றி கூறினார்.

இதேபோல் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி மைதானத்தில் பயிற்சி முடித்த காவலர்களின் பயிற்சி நிறைவின் அணிவகுப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி ஆயுதப்படை ஐ.ஜி.தமிழ்ச்சந்திரன் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து காவலர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி தளவாய் உமையாள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story