மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - கோலார் கோர்ட்டில் தீர்ப்பு


மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - கோலார் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:17 PM GMT)

மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா எலகொண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 28). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி, அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை எலகொண்டஹள்ளி கிராமம் அருகே ஏரிக்கரையோரத்தில் அமைந்துள்ள தைல மரத்தோட்டத்தில் வைத்து கற்பழித்துள்ளார்.

பின்னர் அவர் அந்த பெண்ணை அங்கிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு கடத்திச் சென்றார். அங்கு ஒரு கோவிலில் வைத்து அந்த மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் அந்த பெண்ணை தங்க வைத்து 25 நாட்களுக்கும் மேலாக கற்பழித்துள்ளார். பின்னர் அவர் அந்த பெண்ணை முல்பாகலுக்கு அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் முல்பாகல் புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வெங்கடேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது கோலார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர், வழக்கில் குற்றவாளியான வெங்கடேசுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story