கரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடக்கம்


கரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடக்கம்
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 7:43 PM GMT)

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடங்கியது.

கரூர்,

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகோரி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் மே மாதம் 30, 31-ந்தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி கரூர் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் பணியாற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுத்துறை வங்கி மற்றும் அதன் கிளைகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வங்கியில் இருந்து பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கரூரில், டெக்ஸ்டைல் ஜவுளி நிறுவனங்கள், பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியின் சுழற்சிக்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாததால் அதன் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனினும் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் பொதுமக்களுக்கு இல்லை. சில ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்கப்படாததால் பொதுமக்கள் ஆங்காங்கே ஏமாற்றத்துடன் சென்றதை காண முடிந்தது. ஆனால் வங்கிகளுக்கு தான் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடக்கமானதாக வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கரூர் பழைய பைபாஸ்ரோடு பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தேசிய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும். வாராக்கடன்களை காரணம் காட்டி ஊதிய உயர்வினை மறுக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்றும் (வியாழக் கிழமை) தொடர்ந்து நடை பெறுகிறது. 

Next Story