புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது


புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 7:43 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று முதல் தொடங்கியது.

புதுக்கோட்டை,

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஊழியர் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் மத்திய அரசை கண்டித்து நேற்று மற்றும் இன்று (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரியும் சுமார் ஆயிரத்து 500 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வங்கிகளில் வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனை நேற்று பாதிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஒரு வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் அனைவரும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஊழியர் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் ராமதுரை, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ரவிசங்கர் உள்பட வங்கி ஊழியர் கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story