கடின உழைப்பு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் போலீஸ்காரர்கள் பணியாற்ற வேண்டும்


கடின உழைப்பு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் போலீஸ்காரர்கள் பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 8:18 PM GMT)

கடின உழைப்பு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் போலீஸ்காரர்கள் பணியாற்ற வேண்டும் என்று ஐ.ஜி. அசோக்குமார்தாஸ் கூறினார்.

தஞ்சாவூர்,

சென்னை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், தர்மபுரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2-ம் நிலை போலீஸ்காரர்களாக தேர்வு செய்யப்பட்ட 210 பேருக்கு தஞ்சையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கவாத்து பயிற்சி, விளையாட்டு, இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, மன அழுத்த மேம்பாட்டு பயிற்சி, கணினி பயிற்சி, இணையதளம் குற்றம் சார்ந்த பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வரவேற்றார்.

ஐ.ஜி.அசோக்குமார்தாஸ் பேச்சு

இதில் தொழில்நுட்ப பிரிவு போலீஸ் ஐ.ஜி.அசோக்குமார்தாஸ் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பயிற்சி போலீஸ்காரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

கடந்த 7 மாதங்களாக பயிற்சி பெற்ற போலீஸ்காரர்கள் கடின உழைப்பு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி இருப்பர். இதே கடின உழைப்பு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிநாள் முழுவதும் இருக்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகள் எந்த பதவியில் இருந்தாலும் இதனை கடைபிடிக்க வேண்டும்.

எந்த இடத்தில் பணியாற்றினாலும் இடர்பாடுகள் இருக்கும். இருப்பினும் போலீசார் தங்களுடைய கடமையை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த முறையில் உதவி செய்ய வேண்டும். சட்டப்படி என்ன உதவி செய்ய முடியுமோ? அதை நிறைவேற்ற வேண்டும். பணியில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போலீசாரை பொதுமக்களும், அரசும் பாராட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அணிவகுப்பு மரியாதை

முன்னதாக பயிற்சி போலீஸ்காரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த போலீஸ்காரர்கள் அடுத்த ஒரு மாத செயல்முறை பயிற்சிக்காக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story