கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 8:58 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 120 வங்கிகளில் பணிபுரியும் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.50 கோடி வரையில் மாவட்டத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியறுத்தி கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள இந்தியன் வங்கி எதிரில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளன செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பி.இ.எப்.ஐ. சங்கத்தின் தலைவர் ஹரிராவ், ஏ.ஐ.பி.இ.ஏ. சங்கத்தின் செயலாளர் சந்துரு ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

மத்திய அரசின் சார்பில் இந்திய வங்கிகளின் சங்கம் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் முன்மொழிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், வங்கி ஊழியர் அலுவலர்களின் ஊதிய உயர்வை அலட்சியப்படுத்தும் மத்திய அரசின் போக்கினை கண்டித்தும் வேலை நிறுத்தம் 2 நாட்கள் நடைபெறுகிறது.

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். சம்பளம் மற்றும் இதர பணி நிலைமைகளில் கூடுதலான நியாயமான முன்னேற்றம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற அமைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.


Next Story