தர்மபுரி, நல்லம்பள்ளி, பர்கூர் பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, நல்லம்பள்ளி, பர்கூர் பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 8:58 PM GMT)

ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் தர்மபுரி, நல்லம்பள்ளி, பர்கூர் பகுதிகளில் வேலைவழங்ககோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பச்சாகவுண்டர், மாவட்டக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன், ஒன்றிய செயலாளர் மாதையன், ஒன்றிய தலைவர் சொக்கன், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ராமானுஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தர்மபுரி ஒன்றியம் முழுவதும் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை செய்தவர்களுக்கு சட்டப்படி வட்டியுடன் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊரக வேலை உறுதிதிட்ட பணி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். சட்ட விதிமுறைகளின்படி வேலை வழங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நல்லம்பள்ளி

இதேபோல் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜி, மல்லையன், பாலகிருஷ்ணன், பழனியம்மாள், முனுசாமி, மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஊரக வேலைஉறுதி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைக்கக்கூடாது. நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினார்கள்.

பர்கூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவராஜ் தலைமை தாங்கினார். நரசிம்மன், ஸ்ரீதர், நாராயணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் பழனி, பூதட்டியப்பா, நஞ்சப்பா, சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியமாக தினமும் ரூ.224 வழங்க வேண்டும், 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story