தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்க தடை விதிக்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் மனு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலதொட்டியபட்டி, பிள்ளையார்நத்தம் பகுதியில் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தையே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த 2 நிறுவனங்களும் 1000 அடிக்கு கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து தினமும் பல லட்சம் தண்ணீர் எடுக்கின்றனர். தண்ணீரை சுத்திகரித்த பின்னர் கழிவுநீரை அருகில் உள்ள நிலங்களில் விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பதோடு, உப்பு தன்மை அதிகரித்து குடிப்பதற்கு தகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிப்போருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே விதிகளைமீறும் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த நிறுவனங்களுக்கு குடிநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு தொடர்ந்து தடையில்லா சான்று வழங்க தடை விதித்து உத்தரவிட கோருகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மாநில நில மற்றும் நீர்வள ஆதார மையத்தின் தலைமை என்ஜினீயரும், விருதுநகர் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரியும் 2 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.