குமரி மாவட்டத்தில் மழை: 49 வீடுகள் சேதம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் மழை: 49 வீடுகள் சேதம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 7:40 PM GMT)

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 49 வீடுகள் சேதம் அடைந்தன. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன்தினத்தில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை நேற்றும் நீடித்தது.

மழையின் போது பலத்த காற்று வீசியதால் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் டிரான்ஸ்பார்மர் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து மின்வினியோகம் தடைப்பட்டது.

நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை உள்பட ஒருசில இடங்களில் வழிகாட்டி பலகைகள், எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவை பலத்த மழையின் காரணமாக சாய்ந்து கீழே விழுந்தன.

விடிய, விடிய பெய்த மழை காரணமாக ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. சில இடங்களில் வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 64.4 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-53, சிற்றார் 1- 42.4, மாம்பழத்துறையாறு-27, நாகர்கோவில்-33.2, பூதப்பாண்டி-13.4, சுருளோடு-51.4, மயிலாடி-40.2, கொட்டாரம் 48.2, இரணியல்-21, ஆனைகிடங்கு-28, குளச்சல்-38.4, அடையாமடை-7, கோழிப்போர்விளை-28, முள்ளங்கினாவிளை-29, திற்பரப்பு-39.4 என்ற அளவில் பதிவானது.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்கள் பெய்த மழைக்கு 49 வீடுகள் சேதம் அடைந்தன. விளவங்கோடு தாலுகாவில் 29 வீடுகளும், தோவாளை தாலுகாவில் தடிக்காரன்கோணம் பகுதியில் 5 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 15 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,718 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 447 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 2 ஆயிரத்து 368 கனஅடி தண்ணீர் வருகிறது. இதே போல் சிற்றார்-1 அணைக்கு 101 கனஅடியும், சிற்றார்-2 அணைக்கு 117 கனஅடி தண்ணீரும் வருகிறது. 

Next Story