100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரெயில் என்ஜினை இயக்க நடந்த 2–வது கட்ட சோதனை தோல்வி


100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரெயில் என்ஜினை இயக்க நடந்த 2–வது கட்ட சோதனை தோல்வி
x
தினத்தந்தி 12 Jun 2018 10:15 PM GMT (Updated: 12 Jun 2018 7:46 PM GMT)

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரெயில் என்ஜினை மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி நடந்த 2–வது கட்ட சோதனை தோல்வியில் முடிவடைந்தது.

மேட்டுப்பாளையம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. 1899–ம் ஆண்டு ஜூன் 15–ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தொடக்க காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது.

பின்னர் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 1908–ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்தனர்.

இந்த நிலையில் நிலக்கரி தட்டுபாடு மற்றும் பல்வேறு காரணங்களால் மலை ரெயில் என்ஜின் உந்து சக்தியை இழந்து நடுக்காட்டில் பாதி வழியில் பழுதாகி வந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

சுற்றுலாப்பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜின் நிறுத்தப்பட்டு பர்னஸ் ஆயில் மூலம் மேட்டுப்பாளையம்–குன்னூர் இடையே மலை ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனஸ்கோ நிறுவனம் கடந்த 2005–ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்த நிலையில் சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம்–குன்னூர் இடையே மீண்டும் நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜினை இயக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 1918–ம் ஆண்டு இயக்கப்பட்ட மலை ரெயில் என்ஜின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்காக மலை ரெயில் என்ஜினை இயக்குவதற்காக தரமான நிலக்கரி வரவழைக்கப்பட்டு, சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த பழைய நிலக்கரியை பயன்படுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் கட்ட சோதனை நடைபெற்றது. 2 கி.மீ. தூரம் சென்ற பின்னர் என்ஜினில் போதிய உந்து சக்தி இல்லாததால் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி இயக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2–வது கட்ட சோதனை நேற்று நடைபெற்றது ரெயில் என்ஜினில் 2 டன் நிலக்கரி நிரப்பப்பட்டு காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறுக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. பகல் 1 மணியளவில் சுமார் 5½ கி.மீ. தூரம் உள்ள கல்லாறு ரெயில்வே கோட்டை கடந்து செல்லும் போது என்ஜினில் போதிய உந்து சக்தி இல்லாததால் அங்கேயே மலை ரெயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு பகல் 1.40 மணிக்கு மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 2–வது கட்ட சோதனையும் தோல்வியில் முடிவடைந்தது. புதிய நிலக்கரியை என்ஜினுக்கு பயன்படுத்தும் போது சோதனை ஓட்டம் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அடுத்த கட்ட சோதனைக்குபிறகு

மலை ரெயில் என்ஜினை இயக்குவது குறித்து முடிவுஎடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story