மகளிர் சங்க தலைவியிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது


மகளிர் சங்க தலைவியிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மகளிர் சங்க தலைவியிடம் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி ராணி (வயது 32). இவர் அதே ஊரில் செயல்பட்டு வரும் மகளிர் சங்கத்தின் தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் சங்கத்தில் வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள மாதேப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறும் போது, பையில் வைத்திருந்த ரூ.4 ஆயிரத்து 500-ஐ ஒரு பெண் திருடினார். இதை பார்த்த ராணி கூச்சலிட்டார்.

அப்போது பணத்தை திருடிய பெண் தன்னுடன் வந்த வேறு 2 பெண்களிடம் அந்த பணத்தை கொடுத்தார். இதையடுத்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் பணத்தை எடுத்த பெண் உள்ளிட்ட 3 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து, பணத்தை திருடியதாக கெலமங்கலம் முனுசாமி மனைவி சந்திரா (38), ஜொனபெண்டாவைச் சேர்ந்த முனுசாமி மனைவி கலா(22), கர்நாடகா மாநிலம் மாலூர் சீனிவாசன் மனைவி ஜோதி(30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story