திருச்செந்தூர் அருகே பரிதாபம் - கார் மரத்தில் மோதியது; சப்-இன்ஸ்பெக்டர் பலி
திருச்செந்தூர் அருகே கார் மரத்தில் மோதியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் பால்ஐசக் (வயது 50). இவர் தற்போது, நாசரேத் ஞான்ராஜ் நகரில் வசித்து வந்தார். பால்ஐசக் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பால்ஐசக் தனது காரில் திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். காரை, பால்ஐசக்கின் நண்பரான கொம்மடிக்கோட்டையை சேர்ந்த ராஜா (40) என்பவர் ஓட்டினார்.
திருச்செந்தூரை அடுத்த கல்லாமொழி அருகே சென்ற போது, ராஜாவின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பால்ஐசக் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பால்ஐசக்கை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்தில் ராஜா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
பலியான பால்ஐசக் உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. விபத்தில் இறந்த பால்ஐசக்குக்கு பியூலா என்ற மனைவியும், கிங்ஸ்டன் என்ற மகனும், ஸ்வீட்லின் சுசிலா என்ற மகளும் உள்ளனர். பியூலா நாசரேத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் பால்ஐசக், சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் டபிள்யூ.தேவாரத்துடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story