கர்நாடக காங். புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு செயல் தலைவர் பதவி


கர்நாடக காங். புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம்  ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு செயல் தலைவர் பதவி
x
தினத்தந்தி 4 July 2018 10:30 PM GMT (Updated: 4 July 2018 6:34 PM GMT)

கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியை பறிகொடுத்தது

கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் பரமேஸ்வர். அவர் கடந்த 8 ஆண்டுகளாக தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. அக்கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன.

மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வருக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறையின் கீழ் அவர் கட்சி தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வந்தது. சித்தராமையா, எச்.கே.பட்டீல், தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா ஆகியோரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாயின.

தினேஷ் குண்டுராவ் நியமனம்

தினேஷ் குண்டுராவ் கட்சியின் செயல் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் இளம் தலைவராக கருதப்படும் தினேஷ் குண்டுராவை மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சி நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். செயல் தலைவராக ஈஸ்வர் கன்ட்ரேவும் நியமனம் செய்யப்படுகிறார். தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டு கால பரமேஸ்வரின் கட்சி பணியை பாராட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மந்திரி பதவி கிடைக்காததால் கடும் ஏமாற்றத்தில் உள்ள முன்னாள் மந்திரி ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையா மந்திரிசபையில்...

48 வயதாகும் பிராமணர் சமூகத்தை சேர்ந்த தினேஷ் குண்டுராவ் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா மந்திரிசபையில் உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரியாக சுமார் 3 ஆண்டுகள் பணியாற்றினார். மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டபோது, தினேஷ் குண்டுராவ் மந்திரிசபையில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் தீவிர போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தினேஷ் குண்டுராவுக்கு காங்கிரஸ் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் 2 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் குண்டுராவ் பெங்களூரு காந்திநகர் தொகுதியில் இருந்து தற்போது 5–வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தினேஷ் குண்டுராவ், கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி குண்டுராவின் மகன் என்பது நினைவுக்கூரத்தக்கது.

தலைவர்கள் வாழ்த்து

கர்நாடக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தினேஷ் குண்டுராவ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளார்.


Next Story