நீலகிரியில் லாரிகள் வேலை நிறுத்தம்: ஊட்டி மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிப்பு


நீலகிரியில் லாரிகள் வேலை நிறுத்தம்: ஊட்டி மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 21 July 2018 10:45 PM GMT (Updated: 21 July 2018 7:21 PM GMT)

நீலகிரியில் லாரிகள் வேலைநிறுத்தத்தையொட்டி, ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. சரக்கு வாகனங்களில் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஊட்டி,

தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், நாள்பட்ட சுங்கக்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 லாரிகள் ஓடவில்லை.

விவசாய விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அந்த லாரிகளில் ஏற்றப்பட்டு ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, பெங்களுரு போன்ற பகுதிகளுக்கு அறுவடை செய்த மலைக்காய்கறிகள் ஓரிரு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இருந்தபோதிலும், பெரும்பாலான லாரிகள் ஓடாததால் மலைக்காய்கறிகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழையால் விளைநிலங்கள் எப்போதும் ஈரப்பதமாக காணப்படுகிறது. இதனால் மலைக்காய்கறிகளை அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவியது. லாரிகள் வேலைநிறுத்தத்தையொட்டி சிலர் முன்கூட்டியே மலைக்காய்கறிகளை அறுவடை செய்தனர். தற்போது லாரிகள் ஓடாததால் விவசாயிகள் மலைக்காய்கறிகளை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

மார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, வயநாடு, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்கு வாகனங்களில் மலைக்காய்கறிகள் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரியில் அதிக அளவிலான காய்கறி மூட்டைகளை ஏற்றலாம். சரக்கு வாகனங்களில் குறைந்த அளவிலேயே காய்கறிகளை ஏற்ற முடியும். இருந்தாலும், சரக்கு வாகனங்களில் வெளியிடங்களுக்கு மலைக்காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால், உள்ளூரில் விளையும் கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் வெளியிடங்களுக்கு அனுப்புவது குறைந்து உள்ளது.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மலைக்காய்கறிகள் மூலம் தினமும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெறும். ஆனால், நேற்று ரூ.10 லட்சத்துக்கு வியாபாரம் நடந்து உள்ளது. இதன் மூலம் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. வரத்து குறைவால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ புரூக்கோலி ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. தற்போது ரூ.30 விலை உயர்ந்து கிலோ ரூ.100–க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.55, கேரட்–ரூ.20–25, பீட்ரூட்–ரூ.30–35–க்கு விற்பனை ஆகிறது. காய்கறிகள் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story