2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்


2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் டீசல் விலை உயர்வை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று முன்தினம் நாடுதழுவிய லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 4,500-க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தர்மபுரி ரெயில்வே குட்செட் மற்றும் தொப்பூர் சுங்கச்சாவடி பகுதி உள்பட தேசிய நெடுஞ்சாலைகளின் இரு புறங்களிலும் லாரிகள் நிறுத்தப்பட்டன. தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலைநிறுத்த போராட்ட கோரிக்கைகள் குறித்து லாரி டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக குறைந்த அளவில் வந்த லாரிகளை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரூர், மொரப்பூர், ஆர்.கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் மாவட்டம் முழுவதும் தக்காளி, காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 600 லாரிகள் இயங்கவில்லை. இதனால் ஓசூரில் இருந்து வட மாநிலங்களுக்கு உதிரிபாகங்கள், காய்கறிகள், மலர்கள் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதே போல கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தேங்காய் அனுப்புவதும் பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.

Next Story