ஊராட்சிகளில் மோசடி புகார்: குழு அமைத்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
ஊராட்சிகளில் மோசடி புகாரை தொடர்ந்து உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் அரசு வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தெருவிளக்குகள் மாற்றம், மின்மோட்டார் சீரமைப்பு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை செய்ததாக கூறி போலி ரசீதுகள் பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் ஊராட்சிகளில் உதவி இயக்குனருக்கு புகார்கள் வந்து உள்ளன.
இதையடுத்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தன், திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைத்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.
அந்த குழுவினர் ஊராட்சிகளின் கணக்குகளை ஆராய்ந்து கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த தகவலை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.