சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அதிரடி நடவடிக்கை: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அதிரடி நடவடிக்கை: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 12 Aug 2018 11:45 PM GMT (Updated: 12 Aug 2018 7:51 PM GMT)

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது ஒரு விடுதியின் உரிமையாளர் அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு யானைகள் இடம்பெயர்ந்து செல்ல முடியவில்லை. எனவே அவற்றை அகற்ற வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த 2008–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும், வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்குமாறும், அந்த பகுதிகளில் புதியதாக கட்டிடங்கள் கட்டவும் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த மாதம் வழக்கு விசாரணையின் போது, வக்கீல் யானை ராஜேந்திரன் நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, பொக்காபுரம் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் 400–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இயங்குவதாக வாதிட்டார். இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் எத்தனை?, அவற்றின் தன்மைகள் குறித்து 4 வார காலத்துக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள், 27 பொது கட்டிடங்கள், 9 எஸ்டேட்டுகள், 77 விவசாய விளைநிலங்கள், மற்றவைகள் 9 உள்பட மொத்தம் 821 கட்டிடங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த 8–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கையை பார்த்த நீதிபதிகள் 39 தனியார் விடுதிகளில் 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்துக்குள் சீல் வைக்க வேண்டும் என்றும், மீதம் உள்ள 12 விடுதிகள் 48 மணி நேரத்தில் ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை முறையான ஆவணங்களை வைத்து செயல்படும் பட்சத்தில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என்றும், ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால் அவற்றுக்கும் சீல் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும் 39 தனியார் தங்கும் விடுதிகளை தவிர வழித்தடத்தில் உள்ள மற்ற குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் 2 மாத காலத்துக்குள் குடியிருப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 4 குழுக்கள் அமைக்கப்பட்டு மசினகுடி, பொக்காபுரம் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட 27 தனியார் விடுதிகளை காலி செய்ய உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 48 மணி நேர கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் தாசில்தார் தினேஷ் முன்னிலையில் சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் மேற்பார்வையில் 3 துணை தாசில்தார்கள், 19 கிராம நிர்வாக அலுவலர்கள், 6 கிராம நிர்வாக உதவியாளர்கள் அடங்கிய 2 குழுவினர் நேற்று தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாச்சலம் (கூடலூர்), முரளிதரன் (மசினகுடி) ஆகியோர் மேற்பார்வையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் உள்ள பேர் மவுண்டன் விடுதியை அதிகாரிகள் சீல் வைப்பதற்காக சென்றபோது, அனுமதி பெற்று விடுதி கட்டி உள்ளதாகவும், அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அதன் உரிமையாளர் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அதிகாரிகள் சீல் வைக்க முயன்றபோது, தனக்கான மருந்து, மாத்திரைகள், உடைமைகள் அறைக்கு உள்ளே இருப்பதாக தெரிவித்து சீல் வைத்த அதிகாரிகளை தடுத்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டதுடன், அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றதை தொடர்ந்து, பேரூராட்சி அதிகாரிகள் தனியார் விடுதியின் அறைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த விடுதியின் நுழைவுவாயில் பகுதியில் சீல் வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு நோட்டீசு 2 கட்டப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அனுமதியற்ற, அனுமதிக்கு மாறான இந்த கட்டிடத்தை இன்று (அதாவது நேற்று) மூடி சீல் வைக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சபாரி லேண்ட் விடுதியில் அதிகாரிகள் சீல் வைக்க சென்றபோது, அந்த விடுதியின் கதவுகள் இல்லாமலும், சில அறைகளின் முன்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இல்லாமலும் அகற்றப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தங்களிடம் இருந்த கம்பியை கொண்டு கதவுகளை பூட்டு போட்டு பூட்டி கொட்டும் மழையில் சீல் வைத்தனர்.

அந்த 27 விடுதிகளில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் நைஜில் என்பவரது ஆனசோலை லாட்ஜ்ம் அடங்கும். சீல் வைக்கப்பட்ட ஒவ்வொரு தனியார் விடுதிக்கும் காலி செய்ய 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்தும், பொருட்கள் அகற்றப்படவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அறைகளுக்குள்ளேயே இருந்தன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் 27 விடுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 தனியார் விடுதிகள், மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 10 தனியார் விடுதிகள், கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட 1 தனியார் விடுதி, உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட 1 தனியார் விடுதி என மொத்தம் 27 தனியார் விடுதிகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. இந்த 27 தனியார் விடுதிகளில் 320 அறைகளுக்கு தனித்தனியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மற்ற 12 தனியார் விடுதிகள் குறித்த ஆவணங்கள் நேற்று முன்தினம் மாலைக்குள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த 12 விடுதிகளில் அதிகாரிகள் அளவீடு செய்து, ஆவணங்கள் சரியாக உள்ளனவா? என்று கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த 12 விடுதிகள் மீதான நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story