2 ஆண்டுகளாக மழை பெய்யாததால் மண்டபம் யூனியனில் ஊருணி, நீர்நிலைகள் வறண்டன


2 ஆண்டுகளாக மழை பெய்யாததால் மண்டபம் யூனியனில் ஊருணி, நீர்நிலைகள் வறண்டன
x
தினத்தந்தி 22 Aug 2018 4:15 AM IST (Updated: 22 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளாக மழை பெய்யாததால் மண்டபம் யூனியனில் உள்ள ஏராளமான ஊருணி, நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 20–க்கும் மேற்பட்ட ஊருணிகளும் பல நீர்நிலைகளும் உள்ளன. அதிலும் குறிப்பாக நொச்சியூரணி, மானாங்குடி, புதுடமடம், வலங்காபுரி, கும்பரம், தலைத்தோப்பு, தாமரைக்குளம் உள்பட பல கிராமங்களில் பெரிய ஊருணிகள் உள்ளன. இந்த ஊருணிகளை தான் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் கண்மாய்கள், ஊருணிகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன.

மண்டபம் யூனியனுக்குட்பட்ட பகுதியான நொச்சியூரணி, புதுமடம், மானாங்குடி, தாமரைக்குளம், கும்பரம், வலங்காபுரி உள்பட பல கிராமங்களில் உள்ள ஊருணிகளும் ஏராளமான நீர்நிலைகளும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு போய் காட்சியளித்து வருகிறது.

இது பற்றி நொச்சியூரணியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:– நொச்சியூரணி, கடுக்காய்வலசை, மானாங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயம், கேப்பை, மல்லிகை செடி உள்ளிட்ட பல பயிர்கள் பயிரிடுவோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாததால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டன. விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் கட்டாந்தரையாக காட்சியளித்து வருகின்றன. குடிக்கக்கூட தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வருகிறோம்.

கேரளாவில் பெய்து வரும் கன மழையாலும், வெள்ளப் பெருக்காலும் வைகை அணை நிரம்பியுள்ளதுடன் அணையும் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரை மண்டபம் யூனியனுக்குட்பட்ட கண்மாய், நீர்நிலைகளுக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளும், பறவைகளும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அலைந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story