வாய்க்கால் பாசன கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராதது ஏன்? அமைச்சர்களை முற்றுகையிட்ட விவசாயிகள்


வாய்க்கால் பாசன கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராதது ஏன்? அமைச்சர்களை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 8:23 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் வாய்க்கால் பாசன கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராதது ஏன்? என்று கேட்டு அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

வரலாற்று சாதனையாக இந்த ஆண்டு மேட்டூர் அணை 2–வது முறையாக நிரம்பியதால் அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகள் திருச்சி மாவட்டத்தின் வழியாகவே சீறிப்பாய்ந்து சென்றாலும் இந்த ஆறுகளால் திருச்சி மாவட்டம் பாசன வசதி பெறுவதில்லை. கரூர் கதவணையில் இருந்து திருச்சி முக்கொம்பு வரை காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் 17 கிளை வாய்க்கால்கள் மூலம் மட்டுமே திருச்சி மாவட்டம் பாசன வசதி பெற்று வருகிறது. உய்ய கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி, பெருவளை, அய்யன் வாய்க்கால்கள் இவற்றில் முக்கியமானவையாகும். திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் வாய்க்கால் பாசனம் மூலம் நெல், வாழை, கரும்பு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வாய்க்கால்களின் மூலம் பல ஏரி, குளங்களிலும் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் எப்படி கடைமடை பகுதிகளுக்கு இன்னும் போய் சேரவில்லையோ அதே போல் திருச்சி மாவட்டத்திலும் உய்ய கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை என விவசாயிகள் குறை கூறி வந்தனர்.

இந்நிலையில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேற்று திருச்சி அருகே உள்ள தாயனூர், புங்கனூர், நவலூர் குட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் வாய்க்கால் பாசன பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்றனர். அவர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர்

கே.ராஜாமணி, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், ஸ்ரீரங்கம் தாசில்தார் கனக மாணிக்கம் உள்பட அதிகாரிகளும் சென்று இருந்தனர்.

தாயனூர் சந்தை அருகே  அமைச்சர்கள் இருவரும் காரை விட்டு இறங்கி பழைய கட்டளை வாய்க்காலை பார்வையிட்டனர். இந்த வாய்க்காலில் தண்ணீர் பெயரளவிற்கு தான் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த விவசாயிகள் அமைச்சர்களை முற்றுகையிட்டு மாயனூரில் இருந்து பழைய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் கடைமடை பகுதியான இங்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. அதிகாரிகள் வருகிறார்கள் என்பதால் இன்று (நேற்று) தண்ணீர் வந்து உள்ளது. இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி சாகுபடி பணியை தொடங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அமைச்சர்கள் உங்களுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யவேண்டும் என்பதற்காக தான் நேரில் வந்து உள்ளோம் என்றார்கள். ஆனாலும் விவசாயிகள் சமாதானம் அடையவில்லை. மாயனூரில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விட்டாலும் இங்கு இப்படித்தான் வந்து சேரும். தலைப்பு பகுதியான நச்சலூரில் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற  நடவடிக்கை எடுக்கவேண்டும், வாய்க்கால் நீரை திருடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும், வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம் என ஒரு விவசாயி ஆவேசமாக பேசினார்.

அப்போது கலெக்டர் ராஜாமணி உங்கள் கோரிக்கையை நேரில் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்காக தான் அமைச்சர்கள் நேரில் வந்து இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டீர்கள், அதனை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்த பின்னரும் பஸ்சை மறிப்போம் என்றால் எப்படி? நீங்கள் எத்தனை மறியல் போராட்டம் நடத்தினாலும் அதனை சமாளிக்க நான் தயார் என்று சவால் விடும் வகையில் பதில் அளித்தார். விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பிரமுகர்கள், போலீசார்  தலையிட்டு சமாதானம் செய்தனர்.இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அரியாறு தடுப்பணை, பாப்பான்குளம், நவலூர் குட்டப்பட்டு, புங்கனூர் குளம், ஆகியவற்றையும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தபடி செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story