வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கும் காலணி தயாரிப்பு பயிற்சி


வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கும் காலணி தயாரிப்பு பயிற்சி
x
தினத்தந்தி 11 Sep 2018 7:11 AM GMT (Updated: 11 Sep 2018 7:11 AM GMT)

படித்து முடித்த உடன் வேலைவாய்ப்பு பெறுவது அனைவரின் கனவாக இருக்கிறது.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருவதில் தொழிற்படிப்புகளே முன்னோடியாக விளங்குகிறது. அவற்றில் அதிகமான வேலைவாய்ப்புகளை கொண்ட தொழிற்பயிற்சிகளில் ஒன்றாக காலணி உற்பத்தி விளங்குகிறது. காலணி உற்பத்தியா? என்ற தயக்கம் இருந்த காலம் மலையேறி, இன்று நாட்டில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காலணி தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் பணிபுரிகிறார்கள். நாகரீகமான காலணிகளை ஒன்றுக்கு பலவாக வாங்கி அணியும் மக்களின் பழக்கம் காலணி உற்பத்தியின் தேவையை அதிகரித்திருப்பதே இத்தகைய மாற்றத்திற்கு காரணமாகும்.

மத்திய காலணி பயிற்சி நிறுவனம், காலணி உற்பத்தி தேவைக்கான அனைத்துவித பயிற்சிகளையும் வழங்கும் சிறந்த நிறுவனமாக இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் தமிழக இயக்குனர் முரளி சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கும்போது காலணி உற்பத்தி துறையில் உள்ள பிரகாசமான வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்டார். அது பற்றிய விவரம்...

“நாட்டின் முதல் 10 தொழிற்சாலைகளில் காலணி உற்பத்தித்துறை எப்போதும் இடம் பிடித்துவருகிறது. மத்திய அரசு காலணி உற்பத்தி துறையில் திறன் ேமம்பாட்டு பயிற்சிக்கு என ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய காலணி பயிற்சி நிறுவனம் தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிளை மையத்தில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

காலணிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 22 பில்லியன் ஜோடி காலணிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலக உற்பத்தியில் சுமார் 9 சதவீதமாகும். நாடெங்கும் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலணி உற்பத்தி துறையில் பணி செய்வதற்கு முன்பு மக்கள் தயக்கம் காட்டிய நிலை மாறி உள்ளது. இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சிறுதொழிலில் ஈடுபட கிடைக்கும் வாய்ப்புகள் இப்போது பல தரப்பினரும் இந்த துறையில் ஆர்வம் காட்டி வருவதற்கு முக்கிய காரணமாகும்.

மத்திய காலணி பயிற்சி நிறுவனம், காலணி உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியத் தேவையான மனித வளங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நீண்ட கால பயிற்சி வகுப்புகளும், எட்டு குறுகிய கால பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. பயிற்சியை முடிக்கும் முன்னரே மாணவர்களுக்கு பிரபல நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பு அழைப்புகளும் வந்துவிடுகின்றன. பயிற்சியை நிறைவு செய்ததும் வேலைவாய்ப்பும் உறுதியாகிறது. சுயதொழில் வாய்ப்பும் ஏற்படுகிறது.

முதுநிலை உயர் காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்வி நீண்ட கால பட்டய படிப்பாகவும், காலணி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு எனும் குறுகிய கால பட்டயப் படிப்பும், லண்டனில் உள்ள லீசெஸ்டர் கல்லூரியால் அங்கீகரிக்கப்பட்டு படித்து முடித்ததும் அக்கல்லூரியால் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணத்தை செலுத்த வங்கிக்கடன் வசதியும் உள்ளது.

மத்திய காலணி பயிற்சி மையத்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலமாக உடனடியாக வேலைவாய்பு கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பயிற்சி மையத்தில் படித்த அனைத்து மாணவர்களும் பிரபல காலணி தயாரிப்பு நிறுவனங்களில் பணியில் சேர்ந்்துள்ளனர். சீனா, இத்தாலி, இங்கிலாந்து,, மலேசியா மற்றும் அரபு நாடுகளின் காலணி தயாரிப்பு நிறுவனங்களில் இங்கு படித்த மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பயிற்சி முடிக்கும் திறமையான மாணவர்கள் சில மாதங்களிலேயே ரூபாய் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும். தொழில்தொடங்கி உச்சம் செல்லவும் முடியும். புதிதாக காலணி உற்பத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

குறுகிய கால பயிற்சி வகுப்புகளில் அதிக மாணவர்கள் பங்கேற்றால் அவர்களது மாவட்டங்களிலேயே சென்று பயிற்சி நடத்துகிறோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 100 சதவீத கல்விக்கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த மையத்தில் சேர்ந்து படிப்பதற்கான தகுதி, விண்ணப்பம், இட ஒதுக்கீடு, தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களை www.cftichennai.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்” என்று அவர் கூறி உள்ளார். 

Next Story